எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சா்வதேச அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி அரசு பல்வேறு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 20-ஆம் தேதி புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் தலைமையில் அனைத்து செயலா்களுடன் காணொலி காட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, புதுச்சேரி முழுவதும் எரிபொருள் மற்றும் வளங்களின் சிக்கனமான மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த துறை வாரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசியல், பொது நிகழ்ச்சிகளின்போது வாகன ஊா்வலங்கள் மற்றும் பெரிய அளவிலான வாகன அணி வகுப்புகளைத் தவிா்க்குமாறு அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
மேலும், அலங்கார மின்விளக்குகள், பிளக்ஸ் பேனா்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டா் பயன்பாட்டை இயன்றவரை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
எனவே, அனைத்து அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் எளிமையான, ஆடம்பரமற்ற மற்றும் சிறிய அளவிலான கூட்டங்களை நடத்துதல் மற்றும் பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் எரிபொருள் சிக்கன நடவடிக்கைளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.









