பாழாகும் ஒரு நீராதாரம்!

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், செஞ்சி நகரின் முக்கிய மழைநீர் சேமிப்பு ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஏரியை மீட்கவும், தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
Updated on
2 min read

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த
தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், செஞ்சி நகரின் முக்கிய மழைநீர் சேமிப்பு ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஏரியை மீட்கவும், தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

செஞ்சி நகரின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு ஆதாரமாக விளங்கும் ஏரி, குப்பைகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்பில் சிக்கியும் பாழாகி வருகிறது. அதனை மீட்கவும், தூர்வாரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 செஞ்சி நகரத்திற்கு மேற்கே திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது பி ஏரி. நடுவில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், ஏரி இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் செஞ்சிக்கோட்டையில் இருந்தும், செஞ்சி காட்டில் இருந்தும் வரும் காட்டாற்று வெள்ளம் இந்த ஏரியை நிரப்பி விடும். எனவே எப்போதும் இந்த ஏரியில் குறைந்தளவிலாவது தண்ணீர் காணப்படும். இதன் காரணமாக செஞ்சி நகரின் மத்தியப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும்.
 முக்கிய மழைநீர் சேகரிப்பு ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்பில் சிக்கியும் தற்போது பாழாகி வருகிறது.
 லாரிகளில் கட்டட இடிபாடுகள் கொண்டு வந்து ஏரியில் கொட்டப்பட்டு மெல்ல, மெல்ல கரையோரப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. சுமார் 35 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியில் 35 சதவீத பரப்பு ஆக்கிரமிப்பில் சிக்கிவிட்டது. நீர்க்கொள்ளளவும் குறைந்து விட்டது.
 குறிப்பாக ஏரிக் கரையோரம் குடிசை, சிறிய அளவில் கட்டடம் கட்டவும் ஏரியில் முழுமையாக மண்ணை கொட்டி தூர்க்கச் செய்யும் நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்த ஏரியின் பரப்பளவை அளந்து கணக்கிட்டு அளவு கல் ஊன்றித் தருமாறு செஞ்சி வட்டாட்சியரிடம் செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.
 ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வழக்குரைஞர் சக்திராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் தொடர்ந்துள்ளார். நீர்ப் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மதகை சீர் செய்து கோடிக் கால்வாயை உயர்த்த வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, செஞ்சி நகர சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், திறந்த வெளி நிலம் மற்றும் குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் பெரும்பாலும் குப்பைக் கிடங்காக, கழிவுநீர் குட்டையாக தயக்கமின்றி பயன்படுத்தப்படுகிறது. அவை எளிதில் ஆக்கிரமிக்குள்ளாகியும் விடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கிய காரணியாக விளங்கும் இதுபோன்ற நீர்நிலைகளை பாதுகாப்பது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும். ஆனால், அவர்களோ எப்போதும்போல் பாராமுகமாகவே இருக்கின்றனர் என்றனர்.
 மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், செஞ்சி நகரின் முக்கிய மழைநீர் சேமிப்பு ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஏரியை மீட்கவும், தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது செஞ்சி மக்களின் முக்கியக் கோரிக்கையாகும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com