விழுப்புரம், விக்கிரவாண்டியில் டெங்கு கொசுப் புழு உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விழுப்புரம் கிழக்கு வி.ஜி.பி. நகர், கே.கே.நகர், சாலாமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அங்கு ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கே.கே. நகரில் சிமென்ட் கலவை இயந்திரத்தில் கொசுப் புழுக்கள் இருப்பதை பார்வையிட்டார். அந்த இயந்திரத்தில் டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் அலட்சியமாக இருந்த அதன் உரிமையாளருக்கு ஆட்சியர் ரூ.10,000 அபராதம் விதிக்கவும், அந்த இயந்திரத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், காலிமனைகளில் குப்பைகளை கொட்டும் தேநீர் கடைகள் மற்றும் வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கவும், மீறினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். உடனடியாக 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் கயத்தூர், பனையபுரம், பாப்பனப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கயத்தூர் ஊராட்சியில் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய டிராக்டர் டயர்களில் தேங்கியிருந்த மழை நீரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததால், அதன் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
மேலும், அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மைய குழாயிலிருந்து, அனுமதியின்றி இணைப்பு செய்து பயன்படுத்திய 3 மின் மோட்டார்களை கைப்பற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும், டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டிஸ். கொசு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனுவாசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் செந்திவேல், நகர மருத்துவ அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, முபாரக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.