விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் அணி வகுப்பு மைதானத்தில் சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க வந்த பொதுமக்கள் பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அங்கு மனைவி, குழந்தைகளுடன் வந்த ஒரு நபரை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது, அவர் ஒரு பையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் விவசாயி குடும்பத்தினரை தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மணலூர்பேட்டை அருகேயுள்ள வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் (41) என்பதும், சொத்துத் தகராறு காரணமாக உறவினர்கள், இவரது வீட்டை பூட்டி மிரட்டல் விடுப்பதாகவும் இதுகுறித்து மணலூர்பேட்டை போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தற்கொலை செய்ய திட்டமிட்டு இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை திருக்கோவிலூர் காவல் உள் கோட்டத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி மண்ணெண்ணெய் கேனுடன் பிடிபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.