

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூரில் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆராயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஆராயி. கடந்த 21-ஆம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் சிறுவன் சமயன் உயிரிழந்தார். ஆராயி, அவரது 13 வயது மகள்ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், வெள்ளம்புத்தூருக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறுவன் சமயன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆராயி, சிறுமி தனம் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
சம்பவம் நடந்து 3 நாள்கள் வரை இந்த கிராமத்துக்கு மாவட்ட உயரதிகாரிகள் யாரும் வரவில்லை. புதுதில்லியில் இருந்து ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் தேசிய துணைத் தலைவர் வந்து விசாரிக்கும் வரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறுவன் கொலை, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கிராமத்தில் கடந்த 10 மாத காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அவர்கள் பல்வேறு அச்சத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மர்ம மரணம், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம்.
எனவே, பாதிக்கப்பட்ட ஆராயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நஷ்ட ஈடு, இழப்பீடு வழங்க வேண்டும். தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றார்.
அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜீவா.ராஜா, முருகன், வழக்குரைஞர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.