கோடையிலும் வறண்டு போகாத செஞ்சி குளங்கள்!

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் கடும் வறட்சியிலும் 2 குளங்கள் சுமார் 30 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றன. இந்தக் குளங்களில் இருந்து

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் கடும் வறட்சியிலும் 2 குளங்கள் சுமார் 30 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றன. இந்தக் குளங்களில் இருந்து தினமும் 5 ஆயிரம் குடங்களுக்கு மேல் பொதுமக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
 செஞ்சி வட்டத்திலுள்ள அனந்தபுரம் பேரூராட்சியில் தற்போது குடி நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையைப் போக்க பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 இந்த நிலையில், இந்தப் பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூர்வாரப்பட்ட கீழ்மலை தாமரைக்குளம், செட்டி குளம் ஆகியவை அண்மையில் பெய்த மழையால் சுமார் 30 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றன.
 இதுகுறித்து அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ஷேக்லத்தீப் கூறியதாவது: அனந்தபுரம் பேரூராட்சிக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வழங்க வேண்டிய தென்பெண்ணையாற்று குடிநீர் அளவு 3.30 லட்சம் லிட்டர்.
 உள்ளூர் குடிநீர் ஆதாரங்களைக் கொண்டு வழங்கப்படும் குடிநீரின் அளவு 1.70 லட்சம் லிட்டர்.
 ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால், போர்க்கால அடிப்படையில், அனந்தபுரம் பேரூராட்சியால் பராமரிக்கப்படும் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்த கீழ்மலை தாமரைக்குளம் ரூ.8 லட்சத்திலும், செட்டி குளம் ரூ.4 லட்சத்திலும் தூர்வாரப்பட்டு, 30 அடி ஆழம் வரை மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது.
 தற்போது வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் குளங்களில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் 5,000 குடங்களுக்கு மேல் தண்ணீரை எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
 குளங்களைச் சுற்றிலும் மலைகள் இயற்கையாக அரண்போல அமைந்துள்ளதால், சிறிய மழை பெய்தாலே இந்தக் குளங்கள் நிரம்பி விடுகின்றன. மேலும், அனந்தபுரத்தில் உள்ள 28 சிறு மின்விசை பம்புகளுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகள், கைப்பம்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, 10 பழைய பொது கிணறுகள் தூர்வாரப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், தற்போது இந்தப் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 மேலும், நிகழாண்டில் (2019 - 20) மாநில பேரிடர் மேலாண்மைத் திட்ட நிதியின் கீழ், குடிநீர் வழங்கல் பணிக்காக உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.60 லட்சத்தில் கீழ்மலை ஏரி, பனமலை ஏரியில் புதிய கிணறுகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 மேலும், அனந்தபுரம் பேரூராட்சியின் சித்தரசூர், சிறுவள்ளிக்குப்பம் பகுதிகளுக்கு உள்ளூர் குடிநீர் ஆதாரத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகப்படுத்தும் பொருட்டு, சித்தரசூர் கொங்கரான் குட்டையில் ரூ.40 லட்சத்தில் புதிய கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com