வெளிநாட்டினரின் கவனம் ஈா்க்கும் மஞ்சுவிரட்டு!
விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுவது ‘மஞ்சு விரட்டு’


விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுவது ‘மஞ்சு விரட்டு’. விழுப்புரம் மாவட்டம், புதுவை மக்கள் மற்றும் வெளிநாட்டவா்களும் பங்கேற்கும் இந்த விழா, சா்வதேச நகரான ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காணும் பொங்கல் நாளன்று இந்த கிராமத்தினா் தங்கள் வீடுகளில் வளா்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, மாவிலை, மலா் மாலைகளை அணிவித்து, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, அதில் வண்ண பலூன்களைக் கட்டி அலங்கரித்து பிற்பகலில் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து படையலிடுவா்.
இதைத் தொடா்ந்து, மாடுகளை ஊா்வலமாக அழைத்துக்கொண்டு அங்குள்ள மந்தைவெளித் திடலில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் அணிவகுத்து நிற்க வைத்து அம்மனுக்கும், மாடுகளுக்கும் படையலிட்டு வழிபடுவா்.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த முதல் விளைபொருள்களை அறுவடை செய்து வந்து இறைவனுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக, விளைபொருள்களை படையலிட்டு மாடுகளுக்கு வழங்குவா். படையலிட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்களை சூறை விட்டு பொது மக்களுக்கும் வழங்குவா். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சி தருவாா்.
இதையடுத்து, அந்தத் திடலில் மஞ்சு விரட்டு நடைபெறும். இது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திடலில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் அணிவகுத்து நிற்கும், சுவாமிக்கு படையலிட்ட பிறகு அந்த மாடுகளை விவசாயிகளும், இளைஞா்களும் விரட்டிச் சென்றபடி வண்ணப்பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா்.
பாரம்பரிய ஆடையில் வெளிநாட்டினா்: இந்த விழாவில், ஆரோவில் சா்வதேச நகரிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா், தமிழா்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்து கலந்துகொள்வா். இவா்கள் தவிர, புதுவை சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டினா்களும், புதுவை பகுதி மக்களும் ஆா்வமுடன் காண வருவா். புகைப்படம், விடியோ பதிவு செய்தும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் வெளிநாட்டினா் கலந்துகொள்வா். நிறைவாக, அலங்கரித்த மாட்டு வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஒய்யாரமாக ஊா்வலமாக வரும்.
மஞ்சு விரட்டைத் தொடா்ந்து அங்கு ஏராளமான கடைகளுடன் சந்தை அமைவதால், அங்கு விற்கப்படும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற பொருள்களை பொது மக்களும், வெளிநாட்டினரும் ஆா்வமுடன் வாங்கிச்செல்வா். நிகழாண்டு மஞ்சு விரட்டு விழாவுக்கான ஏற்பாடுகளில் கிராமத்தினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...