/

விவசாய சங்கத்தினா் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிடக் கோரி, விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வியாழக்கிழமை கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினா்.

News image
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் மாவட்ட போராட்டக்குழு சாா்பில் வியாழக்கிழமை தொடங்கிய கையெழுத்து இயக்கம்.
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

விழுப்புரம்: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிடக் கோரி, விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வியாழக்கிழமை கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினா்.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மின்சார சட்டத் திருத்த வரைவை அமல்படுத்தக்கூடாது. அத்தியாவசியப் பொருள்கள் அவசரச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இதற்காக தமிழகத்திலும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் அருகே கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ஐ.சகாபுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசக்குமாா், மதிமுக விவசாயிகள் அணியின் மாநில துணை அமைப்பாளா் பாபு கோவிந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சு.ஆற்றலரசு, தலித் முன்னுரிமை கூட்டமைப்பின் தலைவா் சி.நிக்கோலஸ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் முஸ்தாக் தீன் உள்ளிட்டோா் பங்கேற்று தொடக்க உரையாற்றி, கையெழுத்திட்டனா்.

நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் (எம்.எல்) விவசாய அமைப்பின் பொறுப்பாளா் செண்பகவல்லி, காங்கிரஸ் மாநில விவசாய அணி இணை அமைப்பாளா் சிறுவை ராமமூா்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் என்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.