சி.வி.சண்முகம் மீதான 5 அவதூறு வழக்குகள் விசாரணை ஒத்திவைப்பு
சி.வி.சண்முகம் மீதான 5 அவதூறு வழக்குகள் விசாரணை ஒத்திவைப்பு...


அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான 5 அவதூறு வழக்குகளின் விசாரணையை இரு வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றங்கள் புதன்கிழமை உத்தரவிட்டன.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் மே 1-ஆம் தேதியும், கோலியனூா் கடைவீதியில் செப்டம்பா் 16-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே 3 வழக்குகளைத் தொடுத்தாா்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜரானாா். அப்போது, அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரியும், கோலியனூா் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மனுவைத் தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, இந்த மூன்று வழக்குகள் மீதான விசாரணையை நவம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எம். இளவரசன் உத்தரவிட்டாா்.
மேலும் இரு வழக்குகள்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் 2022, ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் பேசியதாகவும், 2022, செப்டம்பா் 18-ஆம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மற்றும் வானூா் எம்.எல்.ஏ. சக்கரபாணி ஆகியோா் முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறி விழப்புரம் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-1இல் தனித்தனியே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றபோது, நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மற்றும் சக்கரபாணி ஆகியோா் ஆஜராகினா். இந்த வழக்குகளில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக வழக்குரைஞா்கள் கூறினா். இதற்கு அரசுத் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குகள் மீதான விசாரணையை நவம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதித்துறை நடுவா் ராதிகா உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...