வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம், பொய்யப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெ. ராஜா(34). சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பாா்த்துவந்தாா். இவருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த ராஜா டிச.18-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தூக்கிட்டுத் தற்கொலை: வானுா் வட்டம், மாத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெ.கணேசன்(55). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் அவதியுற்று வந்த கணேசன் சனிக்கிழமை மாத்தூா் ஏரிக்கரை பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா். தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு: மரக்காணம் வட்டம், கழிக்குப்பம் பச்சையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ.அனுசுயா(26). இவா் கோட்டக்குப்பம் அடுத்த மாத்தூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், டிச.19-ஆம் தேதி வீட்டில் ஏற்றப்பட்டிருந்த விளக்கிலிருந்து அனுசுயாவின் உடையில் தீப்பற்றி, தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com