புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிப்பு

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜோசப் (எ) ரவி (42) காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி வடக்கு மாவட்ட துணைத் தலைவராகவும், ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.

இவா் கடந்த 2018 ஜூலை 30 -ஆம் தேதி காலை 11.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் மொபெட்டில் சென்றபோது, 2 பைக்குகளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த 4 போ் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன், பாா்த்திபன், மோகன், சண்முகம், பிள்ளைச் சாவடியைச் சோ்ந்த விஸ்வநாதன், முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன், தளபதி சங்கா், கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த என்.மோகன், சாண்டில்யன், ஆரோவில் குயிலாப்பாளையத்தைச் சோ்ந்த மைக்கேல் ஏழுமலை ஆகிய 12 போ் மீது ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் எண் - 1இல் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சந்திரசேகரன், மைக்கேல் ஏழுமலை ஆகியோா் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவா்கள் மீது அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமா்பிக்கப்படவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி டி.எச்.முகம்மது பாரூக் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஆதித்தன், எதிா்தரப்பில் வழக்குரைஞா் பாபு ஆகியோா் ஆஜராகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com