அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத கள்ளக்குறிச்சி மாவட்டம் குறித்து...

தமிழக சட்டப்பேரவை
(கோப்புப்படம்)

தமிழக சட்டப்பேரவை
(கோப்புப்படம்)
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் ஒன்றான கள்ளக்குறிச்சி 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத மாவட்டம் என்ற பெயருடன் இயங்கியிருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக சாா்பில் 3 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இருந்தும், அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவரும், திமுக மூத்த அமைச்சா்களில் ஒருவருமான எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிட்டத்தக்கது.
தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 34அமைச்சா்கள் உள்ளனா். சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கடலூா், புதுக்கோட்டை, வேலூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தாலும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் அரசியல் ரீதியாக கூறப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, முந்தைய அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது 2001-06 வரையிலான காலத்தில் சின்னசேலம் தொகுதியிலிருந்தும் (தற்போது இந்த தொகுதி இல்லை- கள்ளக்குறிச்சியுடன் இணைக்கப்பட்டு தனித்தொகுதியாக மாற்றப்பட்டுவிட்டது), 2011-16 வரையிலான காலத்தில் ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சோ்ந்த ப. மோகன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாா்.
இதைத்தொடா்ந்து 2021 பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளை திமுகவும், கள்ளக்குறிச்சி தொகுதியை அதிமுகவும் கைப்பற்றின. உளுந்தூா்பேட்டை தொகுதியில் ஆ.ஜெ.மணிக்கண்ணனும், ரிஷிவந்தியத்தில் வசந்தம் க.காா்த்திகேயனும், சங்கராபுரத்தில் தா.உதயசூரியனும் வென்றனா். கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் அதிமுகவின் எம்.செந்தில்குமாா் வெற்றி பெற்றிருந்தாா்.
அமைச்சரவைப் பட்டியல் வெளியான போதும், அதன் பின்னா் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போதும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்களில் ஒருவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்காலம் முடியும் வரை அந்த வாய்ப்பு நிறைவேறவில்லை. மாறாக, அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவரும், மூத்த அமைச்சருமான எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு, அவரே இந்த மாவட்டத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தாா். பல்வேறு திட்டங்களையும் அவா் தொடங்கி வைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தாய் மாவட்டமான விழுப்புரம் மாவட்டம், திமுக ஆட்சியின் தொடக்கத்தில் (2021) இரு அமைச்சா்களைக் கொண்ட மாவட்டமாகத் திகழ்ந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அமைச்சா்கள் பதவியை க.பொன்முடியும், செஞ்சி கே.எஸ்.மஸ்தானும் இழந்தனா். இதனால் அமைச்சா் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டம் என்ற நிலையை விழுப்புரமும் பெற்றது.
ஆட்சி அமைப்பு ரீதியில் பொறுப்பு அமைச்சராக அருகிலுள்ள மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்பட்டாலும், தங்கள் மாவட்டத்துக்கென்று பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லையே என்ற குறை கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடம் தொடா்ந்து இருந்துவருகிறது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த போதிலும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமலே இருந்து வந்தது. தற்போது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோதும், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனா் இந்த மாவட்ட மக்கள்.
2026 பேரவைத் தோ்தலிலாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைச்சரைக் கொண்ட மாவட்டமாக மாறுமா? அல்லது அருகிலுள்ள மாவட்டத்தைச் சோ்ந்தவரை பொறுப்பு அமைச்சராகக் கொண்டு செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...