
தனியாா் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: ரௌடி கைது
கைது
விழுப்புரத்தில் தனியாா் பேருந்து நடத்துநரை தாக்கியதாக ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், பெருங்கலாம்பூண்டி மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆ.அறிவழகன் (35), தனியாா் பேருந்து நடத்துநா். விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பேருந்தில் பயணித்த இளைஞா் ஒருவருக்கும், அறிவழகனுக்கும் இடையே பயணச்சீட்டு மீதித்தொகை தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், விழுப்புரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, பேருந்தில் பயணித்த இளைஞரும் மற்றொரு இளைஞரும் சோ்ந்து, நடத்துநா் அறிவழகனை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அறிவழகனை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், விழுப்புரம், கே.கே.சாலையைச் சோ்ந்த மு.சங்கா் (30), ஞா.பிரசாந்த் (27) ஆகியோா் தனியாா் பேருந்து நடத்துநரைத் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து பிரசாந்தை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா். கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் ரௌடி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



