கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்தது. கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு அதை திமுக எதிர்த்ததாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுக்குழுவைக் கூட்டி கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் மக்களவையில் தி.மு.க.வுக்கு 28 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளுக்கு 10 இடங்களும் இருந்தன. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க வேண்டுமானால் அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், நிர்வாக ஆணை அடிப்படையில் கச்சத்தீவு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக போராடியிருந்தாலோ, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தாலோ கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கும். ஆனால், கருணாநிதி அதை செய்யவில்லை.