பெங்களூரு

மாநகராட்சி அலுவலகங்களில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

DIN

பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் திடீரென ஆய்வு நடத்தினார்.
பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட தாசரஹள்ளியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் திடீரென சென்றார். அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்த பிறகு, அங்கிருந்த அதிகாரிகளிடம் சில தகவல்களை கேட்டறிந்தார். அப்போது காலை 10.30 மணி ஆகியிருந்தாலும், அலுவலகத்துக்கு மாநகராட்சி இணை ஆணையர் வெங்கடாசலபதி உள்ளிட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் பலர் உரிய நேரத்தில் வராததால் அதிருப்தி அடைந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அதிகாரிகள் நேரத்துக்கு வருவதில்லையா? என்று மற்ற அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது, அங்கு காலதாமதமாக வந்த மாநகராட்சி இணை ஆணையர் வெங்கடாசலபதியை கடிந்துகொண்ட துணை முதல்வர், மழை பாதிப்புகளை தடுக்க எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்டார். 
தாசரஹள்ளிபகுதிக்கு மாநகராட்சி ஒதுக்கிய நிதி, செலவழித்த நிதி, செயல்படுத்திய திட்டங்கள் குறித்து துணை முதல்வர் கேட்ட கேள்விக்கு அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அதிகாரிகள் தடுமாறி, வியர்த்து விறுவிறுத்தனர். மக்கள் குறைகளை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற துணை முதல்வர், மக்கள் குறைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டு அதிகாரிகளை துளைத்தெடுத்தார். அதிகாரிகள் சரியாக பதிலளிக்காமல் போனதால், அதிருப்தி அடைந்த துணை முதல்வர் பரமேஸ்வர், அவர்களை கடிந்துகொண்டார். 
ஒன்றரை மணி நேரம் அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.பரமேஸ்வர் கூறியது: பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாகம் சுமுகமாக நடக்க வேண்டுமென்பதற்காக 8 மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். மண்டலத்துக்கு தலைமை வகிக்க இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டலத்தின் முழுப் பொறுப்பு அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மண்டலத்தில் ஏதாவது குறையிருந்தால் அதற்கு இணை ஆணையர்களே பொறுப்பாவார்கள். குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை, குப்பை அகற்றம், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவது போன்றவற்றில் இணை ஆணையரின் பொறுப்புதான் முக்கியமாகும். 3 ஆண்டுகளாக நடக்க வேண்டிய பணிகள் ஏராளம் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT