விவசாயக் கடன்களை ஜனவரி 31-க்குள் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை: கர்நாடக முதல்வர் குமாரசாமி
கர்நாடகத்தில் விவசாயக் கடன்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் விவசாயக் கடன்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
கொப்பள் மாவட்டத்துக்குள்பட்ட கினிகேரா விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதற்கு, சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதுதொடர்பாக திட்டங்களை தீட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் திருட்டு தடுக்கப்படும்: மணல் திருட்டுக்கு ஒரு சில அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடந்தையாக இருந்தனர் என்பது உண்மைதான். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, சரி செய்துள்ளேன்.
இருந்தாலும், சில இடங்களில் மணல் திருட்டு தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
ராய்ச்சூரில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற கிராம கணக்காளர் சாகேப் பாட்டீல் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் முடிவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தனது கடமை செய்வதில் எந்த குறுக்கீடும் இருக்காது.
அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். ஆனாலும் எதையும் ஒரே நாளில் கொண்டுவருவது என்பது சாத்தியமாகாது. படிப்படியாக அனைத்தையும் கூட்டணி அரசு செய்யும் என்றார் குமாரசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.