தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
தமிழகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், வேலுா் ஆகிய பகுதிகளில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 15 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) முதல் மாா்ச் 16 வரை லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மாா்ச் 17, 18 ஆகிய தேதிகளில் மிதமான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை-30 மி.மீ., நான்குனேரி (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), நம்பியாறு அணை (திருநெல்வேலி)-20 மி.மீ., காயல்பட்டினம் (தூத்துக்குடி), களக்காடு (திருநெல்வேலி)-10 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.