சென்னை

கழிவறை வசதி இன்றி செயல்படும் தபால் நிலையங்கள்: தபால் துறை தீர்வு காணுமா?

DIN

சென்னை நகரில் பல இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிப்பதாக வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் குறை கூறுகின்றனர்.

விரைவு கடிதங்கள், பதிவு செய்யப்பட்ட தபால் மற்றும் பார்சல் அனுப்புதல், மணியார்டர், சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேவைகளை அளிப்பதில் தபால் நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சென்னை நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தபால் நிலையங்கள் உள்ளன. இந்த தபால் நிலையங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இன்மையால் ஊழியர்களும், இந்த தபால் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வாடகைக் கட்டடங்களில்: தபால் நிலையங்கள் பெரும்பாலானவை வாடகைக் கட்டடங்களில்தான் இயங்குகின்றன. சொந்தக் கட்டடத்தில் செயல்படுபவை மிகக் குறைவு. தபால் நிலையங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்க சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு ஏற்ப இல்லை. இதனால், சென்னை நகரில் பல தபால் நிலையங்கள் மாற்று கட்டடங்கள் கிடைக்காமல் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன.

அத்துடன், வீட்டு உரிமையாளர்கள் பலர் தபால் துறைக்கு தங்கள் கட்டடத்தை வாடகைக்கு அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு தபால் துறையின் விதிகளுக்குட்பட்டு நிர்ணயிக்கப்படும் குறைந்த வாடகை கட்டணமும் ஒரு காரணம். இதனால், தபால் நிலையம் செயல்பட இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், ஒரு அரசு அலுவலகத்துக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தைப் பிடித்துதான் பெரும்பாலான தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கழிப்பறை இல்லை: அயனாவரம் சிக்னல் அருகில் உள்ள வெங்கடேசபுரம் தபால் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இங்கு ஒரு பெண் ஊழியர் உள்பட சிலர் பணிபுரிகின்றனர். இதேபோல் அரும்பாக்கம் சிக்னல் எதிரில் உதவும் கரங்கள் அருகே ஒரு சிறிய தெருவில் வாடகை கட்டடத்தில் இயங்கும் வடக்கு தபால் நிலையத்திலும் கழிப்பறை வசதி கிடையாது. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் செயல்படும் தபால் நிலையத்தில் கழிப்பறை பராமரிக்கப்படவில்லை.

தனியார் கட்டடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளதால், மாநில அரசு, மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் தபால் நிலையங்கள் செயல்படும் நிலையில், அவற்றில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்கின்றனர் பாதிக்கப்படும் ஊழியர்கள்.

முதியோருக்கு சிரமம்: கோயம்பேடு தபால் லையம் முதல் தளத்தில் இயங்குகிறது. உயரமான படிக்கட்டுகளைக் கடந்து இங்கு செல்ல வேண்டியிருப்பதால் முதியோர் அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
மதுரவாயல் சாலையில் கோல்டன் பிளாட் சிக்னல் அருகில் உள்ள தபால் நிலைய வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து கிடப்பதால், பொதுமக்கள் தடுக்கி விழும் நிலை காணப்படுகிறது.

வாகன நிறுத்துமிடம் இல்லை: சென்னை, சேத்துப்பட்டு தபால் நிலையம் ஒரு குறுகிய தெருவான செல்வநாதன் தெருவில் குறைந்த வாடகை என்பதால் அப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லை. பொதுமக்கள் மிக எளிதாக அணுகும் வகையில் இந்த தபால் நிலையம் இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இதே பகுதியில் சற்று தொலைவில் கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் தபால் துறைக்கு சொந்தமான காலிமனை உள்ளது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும் இங்கு கட்டடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில், கீழ்ப்பாக்கம் தபால் நிலையம் இயங்கியது. கட்டடம் பழுதடைந்ததால் அதை அகற்றிய நிலையில், புதிய கட்டடம் கட்டப்படவில்லை.

ஊழியர்கள் வேதனை: தபால் துறை ஊழியர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பணிபுரிய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் தபால் நிலையத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமத்தைச் சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில், எப்படி தபால் துறை வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சேவையாற்ற முடியும் என்று தபால் ஊழியர்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

தபால் துறை தயக்கம் காட்டக் கூடாது: தபால் நிலையங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பாக தேசிய தபால் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பி.மோகன் கூறியது: 

இன்றைய நடைமுறைக்கு உதவாத தபால் துறையின் நியாயமான வாடகை நிர்ணயிக்கும் குழுவின் விதிகள் மாற்றப்பட வேண்டும். இதை மாற்றுவதால் தபால் துறைக்கு செலவீனங்கள் அதிகரிக்கும். ஆனால் அரசு, மக்கள் சேவை துறையில் இலாப, நஷ்ட கணக்கு பார்ப்பது கூடாது. வாடகை கட்டுப்படியாகாவிடில், சொந்த கட்டடம் கட்ட தபால் துறை தயங்கக் கூடாது.

மக்களுக்கு சேவை புரிய வேண்டிய இடங்களில் தபால் நிலையங்களை அமைக்கத் தவறுவதோடு, கட்டடம் கிடைக்கவில்லை எனக் காரணம் காட்டி பல இடங்களில் தபால் நிலையங்களை மூடுவதும், அந்த தபால் நிலைய சேவையை மற்றொரு தபால் நிலையத்துடன் இணைப்பதும் தபால் துறை நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகச் செய்துள்ளது. பல இடங்களில் தபால் சேவையை நாடி வெகுதூரம் செல்லும் நிலை நீடிப்பதை அரசு நிர்வாகம் இப்போதாவது தவிர்க்க வேண்டும் என்றார் பி.மோகன்.

அதிகாரி தகவல்: இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை மண்டல தபால் துறை உயரதிகாரி கூறியது:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தபால் நிலையத்துக்கும் கழிவறை உள்பட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ரூ.1 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. வாடகைக் கட்டடத்தில் இயங்கும் தபால் நிலையத்துக்கு இந்த நிதி உதவி கிடையாது. வெங்கடேசபுரம் தபால் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை என்பது தொடர்பாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதன்அடிப்படையில், அதன் உரிமையாளரிடம் பேசினோம். 

தீர்வு கிடைக்காததால், தபால்துறையின் சொந்த கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோல, மற்ற இடங்களில் வாடகை கட்டடத்தில் இயக்கும் தபால்நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாத அலுவலகங்களை அடையாளம் கண்டு வருகிறோம். இதற்கு உரிய தீர்வு விரைவில் காணப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT