சென்னை

3,475 பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள்

DIN

தமிழகம் முழுவதும் ரூ. 8 கோடி மானியத்தில் 3,475 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 'வேளாண்மையில் மகளிர்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. 
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். வளாகத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த மாடித் தோட்டத்தை மீன் வளத்துறை டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தமிழகம் முழுவதும் 6.30 லட்சம் சுய உதவிக் குழுக்கள், 95.02 லட்சம் உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இக்குழுக்களின் மொத்த சேமிப்பு ரூ.6,839 கோடி. வங்கிகள் மூலமாக இதுவரை வழங்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் ரூ.44,452 கோடி. ஒவ்வொரு ஆண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
2017-18-ஆம் நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்ட வங்கிக் கடன் ரூ. 7,000 கோடியைத் தாண்டி உள்ளது. உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தில் இதுவரை 3.36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
இதுவரை 3,475 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 8.69 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளுர், விழுப்புரம் மாவட்டங்களின் 10 வட்டங்களில் பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
இதில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT