முகப்பு
சென்னை

ரூ.16 கோடியில் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு திட்டப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 10 மே 2018, 4:20 am IST
வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு திட்டப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி. டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் எஸ். கோகுலஇந்திரா உள்ளிட்டோ
பகிர்:

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு திட்டப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில், 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை சீர்மிகு நகரம் நிதியிலிருந்து ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் - சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது.
வில்லிவாக்கம் ஏரி பகுதியில், திட்டப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விரிவான ஆய்வு: வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நீர்நிலையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு சொந்தமானது. ஆனால், தற்போது அது பயன்படாத நிலையில் உள்ளது. இந்த ஏரியை முறையாக புனரமைத்தால், வில்லிவாக்கம் பகுதியில் ஒரு பிரதான நீர் நிலையாக இருக்கும். மேலும் இதன் மூலம் வில்லிவாக்கம் பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கலாம். இதைக் கருத்தில்கொண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மைச் செயலர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி சேவை நிறுவனம் மூலம் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் திட்ட அறிக்கை பெறப்பட்டது.
என்னென்ன திட்டப் பணிகள்: ஏரியை தூர்வாருதல், அதன் கொள்ளளவை 20 ஆயிரம் கனமீட்டரில் இருந்து 70 ஆயிரம் கனமீட்டராக அதிகரிப்பது, ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடை பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், வேலி, திறந்தவெளி திரையரங்குகள் ஆகியவற்றை அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்கழிப்பறை வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments