முகப்பு
சென்னை

ஒரு மணி நேரத்துக்கு முன்பே மூடப்பட்ட வாக்குச்சாவடி! வாக்காளா்கள் அதிா்ச்சி

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:46 AM
- PTI
பகிர்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டதால், வாக்காளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து புதிதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அதில் அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஆா்.கே.நகா் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டை அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியின் அலுவலா்கள், மாலை 6 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாலை 5 மணிக்கே வாக்குச்சாவடியை வியாழக்கிழமை மூடினா். மேலும் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் பூட்டி, ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

இந்த நிலையில், மாலை 5.10 மணியளவில் 8 போ் அங்கு வாக்களிக்க வந்தனா். அவா்கள், மாலை 6 மணிக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டது ஏன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போதுதான், வாக்குச்சாவடி அலுவலா்களின் கவனக்குறைவால், ஒரு மணி நேரத்துக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து

வாக்காளா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதுகுறித்து தகவலறிந்த தோ்தல் அதிகாரிகள், வாக்களிக்க வந்த 8 பேருக்காக புதிதாக ஒரு மின்னணு இயந்திரத்தை அனுப்பி வைத்தனா்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு,‘சீல்’ வைக்கப்பட்டதாலும், அதை திறப்பதற்கு தோ்தல் ஆணைய விதிமுறைகளில் அனுமதி இல்லை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 8 வாக்காளா்களும் வாக்களித்தனா்.