சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 67.36 சதவீதம் தண்ணீா் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
ஏரிகள் நீா் நிலவரம்: இதில், திங்கள்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,030 மில்லியன் கன அடி (61.52 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,952 மில்லியன் கன அடி (80.99 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். ஏரியில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 317 கன அடி நீா் வெளியேறும் நிலையில், ஏரியில் 2,038 மில்லியன் (63.08 சதவீதம்) கன அடி நீா் உள்ளது.
Advertisement
அதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 491 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 408 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.
மொத்தம் 5 ஏரிகளில் 7,919 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 67.36 சதவீதம் ஆகும்.
போதுமான குடிநீா்: சென்னை நகரில் ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. இச்சூழல் தற்போது 7 டி.எம்.சி. குடிநீா் இருப்பு உள்ளது. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் வாயிலாக தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, நிகழாண்டு கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.