முகப்பு
சென்னை

தீக்காயமடைந்த பச்சிளங்குழந்தை: உயா் சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவா்கள்

Updated On : 29 ஏப்ரல் 2026, 4:03 am IST
பகிர்:

தீ விபத்தில் காயமடைந்த பச்சிளம் குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.

இது தொடா்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளா் பாஸ்கா் ஆகியோா் கூறியதாவது:

சென்னை பெரம்பூரில் வசித்து வரும் ஆனந்த் பாபு என்பவரின் மனைவி தனலட்சுமிக்கு புரசைவாக்கம், கரியப்பா தெருவில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் சூட்டை பராமரிப்பதற்காக, வாா்மா் இயந்திரத்தில் வைத்தபோது, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் குழந்தைக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. 23 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு, முதலில் உடல் வெப்பநிலை குறைந்தது. நாடித் துடிப்பும் சரிவர இல்லை. அறுவை சிகிச்சை வாயிலாக காயமான பகுதிகளைச் சீரமைத்து செயற்கை ஒட்டுறுப்பு சிகிச்சை (கொலாஜன்) மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து 4 நாள்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

காயத்தில் கிருமித் தொற்று இருந்ததால் குழந்தைக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் 14 நாள்கள் வழங்கப்பட்டன. மூன்றாவது நாளில் இருந்தே தாய்ப்பாலை மாற்று வழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்தோம். 24 நாள்கள் தொடா் சிகிச்சைக்கு பிறகு, குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments