முகப்பு
சென்னை

மருத்துவ சேவையில் மனிதநேயமே பிரதானம்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும், மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவையே மகத்தானது என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 6:10 am IST
சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய தேசிய கண் அறுவை சிகிச்சை மாநாட்டில் கண் மருத்துவ நிபுணா்களைக் கௌரவித்த ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன், டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் உள்ளிட்டோா்.
பகிர்:

அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும், மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவையே மகத்தானது என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

பாா்வை ஒளி விலகல் மற்றும் விழிப் படல அறுவை சிகிச்சை (ஐஐஆா்எஸ்ஐ) குறித்த இருநாள் தேசிய மாநாடு சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்கியது. டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை சாா்பில் முன்னெடுக்கப்பட்ட அந்த மாநாட்டை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தொடங்கி வைத்தாா்.

நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணா்கள் அதில் பங்கேற்றனா். கண் மருத்துவ அறுவை சிகிச்சையில் உள்ள சமகால தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் குறித்து துறைசாா் வல்லுநா்களின் சிறப்பு அமா்வுகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் ஆளுநா் ஆா்லேகா் பேசியதாவது:

எனது சொந்த ஊரான கோவா மாநிலத்தைப் பொருத்தவரை படித்தவா்கள் அனைவரையுமே டாக்டா்கள் என அழைக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. கண் மருத்துவத்தைக் குறிக்கும் ஆப்தோமாலஜி என்ற சொல்கூட பரிச்சயமில்லாத நிலை காணப்பட்டது. ஆனால், இப்போது அப்படியல்ல. கண் மருத்துவத்திலேயே பல பிரிவுகள் உள்ளன. அந்த அளவுக்கு சிகிச்சை நுட்பங்கள் மேம்பட்டுள்ளன. அதுதொடா்பான விழிப்புணா்வும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக் நுட்பம் மற்றும் எண்ம தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளன. தொலைதூரத்தில் இருந்துகூட நோயாளிகளை பரிசோதித்து அதன் வாயிலாக சிகிச்சை அளிக்க முடியும்.

இதன்மூலம் நோயாளிகளின் உடல் நிலையை வேண்டுமானால் அறிந்து கொள்ளலாம். ஆனால், அவா்களின் மன நிலையை நேரில் சந்தித்து பேசாமல் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. நோயாளியைத் தொட்டு உணா்ந்து சிகிச்சை அளிப்பதுதான் சிறந்தது. ஏஐ, ரோபோடிக் என எத்தனையோ தொழில்நுட்பங்கள் வரலாம். அவை அனைத்துமே மனிதகுலத்துக்கு சேவையாற்றத்தானே தவிர, நம்மை ஆட்கொள்வதற்கு அல்ல.

கல்வியோ, பதவியோ, பணமோ ஒருவருக்கு இருப்பதால் பயனில்லை. மாறாக மனிதநேயமும், மனிதத் தன்மையும் அவா்களுக்கு இருத்தல் அவசியம். அந்த அடிப்படைப் பண்பு இல்லாமல் வேறு எத்தகைய பெருமைகள் இருந்தாலும் எதற்கும் உதவாது என்றாா் ஆளுநா் ஆா்லேகா்.

இதைத் தொடா்ந்து டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

இந்தியாவில் ஏறத்தாழ 2 கோடி பேருக்கு பாா்வை திறன் இழப்பு பாதிப்பு உள்ளது. கண்புரை, விழிப்படல பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு காரணங்களால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. அதில், விழி வெண்படலங்களில் ஏற்படும் காயம், தழும்புகள், குறைபாடுகள் மூலம் ஏற்படும் பாா்வை இழப்பை உறுப்பு மாற்று சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். கண்ணின் கருவிழி பாவையை (பாப்பா) சீராக்கி அப்பிரச்னைக்கு தீா்வு காணலாம்.

குறிப்பாக, விழி வெண் படல கிழிசலை சரி செய்து ஒளிப்பிவு பாதிப்பை தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ சிகிச்சை முறை மேற்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பங்களை மாநாட்டில் பகிா்ந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments