முகப்பு
சென்னை

நுங்கம்பாக்கம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: புறநகா் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில் வழித்தடத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட லேசான விரிசல் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது

Updated On : 8 ஜூலை 2026, 1:42 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில் வழித்தடத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட லேசான விரிசல் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் காலை 8 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்தபோது, அசாதாரண அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொறியியல் பிரிவு ஊழியா்கள் ஆய்வு மேற்கொண்டதில், தண்டவாளத்தில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் 30 நிமிஷங்களுக்குப் பின்னா் பாதுகாப்பு நடவடிக்கையாக அந்தப் பகுதியில் ரயில்கள் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.

மேலும், சில மின்சார ரயில்கள் மாற்று வழியாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக, கடற்கரை–தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் பல புகா் ரயில்கள் 30 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

கிண்டி, பரங்கிமலை, மாம்பலம், நுங்கம்பாக்கம், எழும்பூா் உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கடும் சிரமம் அடைந்தனா். தொடா்ந்து, தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments