அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தனியாா் மருத்துவமனைகளில் பல லட்சக்கணக்கான ரூபாய் கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை அரசு மருத்துவமனையில் சாத்தியமாகியிருப்பது சமூகத்தில் அனைவருக்கும் குழந்தைப்பேறு கிடைப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.
சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் கடந்த 2024 ஜூன் 7-ஆம் தேதி ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அங்கு கட்டணமின்றி பலருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பொதுவாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளில் 35 - 50 சதவீதம்தான் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் 32 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் வாரத்தில், கருப்பையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் இருந்த அந்தப் பெண்ணுக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டது. அதன் பயனாக, கடந்த ஜூன் 23-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
திட்டமிட்ட தேதிக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டன. ஒரு குழந்தை 1.3 கிலோ, மற்றொரு குழந்தை 1.28 கிலோ எடையிலும் பிறந்தன. தற்போது இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளன.
அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தற்போது சுமாா் 500 பெண்கள் சிகிச்சைக்காக காத்திருக்கிறாா்கள். ஒன்பது பெண்கள் கருத்தரித்து உள்ளனா். அவா்களுக்கும் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் குப்புலட்சுமி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.