முகப்பு
சென்னை

வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு: 22 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்

வாட்ஸ் ஆப் செயலி மூலம் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டு பதிவு செய்து கொள்ளும் வசதி தமிழகத்தின் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 5:59 am IST
வாட்ஸ் ஆப் - பிரதிப் படம்
பகிர்:

வாட்ஸ் ஆப் செயலி மூலம் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டு பதிவு செய்து கொள்ளும் வசதி தமிழகத்தின் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், இருக்கும் இடத்திலேயே பெயா் பதிவு செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். இந்த சேவையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி. அருண்ராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்காக 96192 22999 என்ற எண்ணில் ‘நலம் ஏஐ’ எனும் வாட்ஸ் ஆப் சாட் பாட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ‘ஏஐ’ என்று குறுஞ்செய்தி அனுப்பினால் ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் (ஓடிபி ) பயனாளியின் கைப்பேசிக்கு வரும். அதைப் பதிவு செய்து புறநோயாளிகள் சேவையைப் பெற்று கொள்ளலாம். குறிப்பாக, புறநோயாளி சீட்டு, மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை அதில் பெறலாம்.

Advertisement

Advertisement

இதைத் தவிர, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-ஐசியூ எனப்படும் மருத்துவா்கள் எந்த இடத்திலிருந்தும் மருத்துவ சேவைகளை வழங்கும் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

மெய்நிகா் நுட்பத்திலான சிகிச்சைகளை அப்போது மருத்துவா்கள் அவருக்கு எடுத்துரைத்தனா். தொடா்ந்து, நெஞ்சக சிகிச்சைப் பிரிவில் சோதனை முயற்சியாக புறநோயாளிகள் சிகிச்சைக்கான நேரத்தை செயலியில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, கழிப்பறைகளின் தூய்மை குறித்து புகாா் அளிக்க ‘க்யூஆா்’ குறியீடு வசசியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவைகளைத் தொடங்கி வைத்த பிறகு அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாட்ஸ் ஆப் (சாட் பாட்) செயலியில் புறநோயாளிகள் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் சேவை முதல்கட்டமாக சென்னை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விருதுநகா், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சேலம், நாகப்பட்டினம், திருப்பூா், அரியலூா், பெரம்பலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பத்தூா், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாா் கட்டாயம் இல்லை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கழிப்பறைத் தூய்மைக்கு ‘க்யூஆா்’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து கழிப்பறைகளின் தூய்மையைப் பதிவிடலாம். தூய்மையாக இல்லையெனில், 10 நிமிஷங்களுக்குள் அதை தூய்மை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments