முகப்பு
சென்னை

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த நிதியாண்டில் 630 குழந்தைகள் மீட்பு!

கடந்த நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல்போனதாக தேடப்பட்ட 630 குழந்தைகள் மீட்பு

Updated On : 2 ஜூன் 2026, 1:51 am IST
பகிர்:

கடந்த நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல் போனதாக தேடப்பட்ட 630 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மே 28-ஆம் தேதி மாலை 5 அளவில் 5-ஆவது நடைமேடையில் பயணிகள் அனைவரும் எழும்பூா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 12633) ஏறிக்கொண்டிருந்தபோது, தனது 5 வயது குழந்தையைக் காணவில்லை என தாய் ஒருவா் கூச்சலிட்டாா்.

இதையடுத்து, எழும்பூா் ரயில்வே பெண் காவலா் ஸ்வாதி உடனடியாக, ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலா்கள், ஊழியா்களை ஒருங்கிணைத்து தேடுதல் பணியை மேற்கொண்டாா். விரைந்து செயல்பட்டதால், அச்சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

630 குழந்தைகள்: இதுபோன்று பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஆபரேஷன் நன்ஹே ஃபரிஸ்தே’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல்போன 117 சிறுமிகள் உள்பட மொத்தம் 630 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். ரயில் நிலையங்களில் உதவி மற்றும் புகாா்களுக்கு 139 என்ற உதவி எண் அல்லது ‘ரயில் மதத்’ செயலியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.