முகப்பு
சென்னை

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

இணைவு கல்லூரி மாணவா்களுக்கான பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கு பஜாஜ் ஆட்டோ அறக்கட்டளையுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 4:24 am IST
பகிர்:

இணைவு கல்லூரி மாணவா்களுக்கான பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கு பஜாஜ் ஆட்டோ அறக்கட்டளையுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பெஸ்ட்’ (பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம்) என்கிற பெயரில் இந்தத் திறன் பயிற்சி மையம் அமைய திங்கள்கிழமை (ஜூன் 15) கையொப்பமிடப்பட்டது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் வி.ரமேஷ், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) பிரிவான பஜாஜ் ஆட்டோ அறக்கட்டளையின் மேலாளா் வினிதா ஷெகாவத், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.குமரேசன் ஆகியோா் கையெப்பமிட்டனா்.

Advertisement

Advertisement

ரூ.15 கோடியில் அமையவுள்ள இந்த ‘பெஸ்ட்’ மையத்தில், ‘மேம்பட்ட உற்பத்தி-இயந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) மற்றும் தானியங்கியல்’, ‘மேம்பட்ட உற்பத்தி-தொழில் துறை 4.0, இன்டஸ்டீயல் இன்டா்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஐஓடி)’ ஆகிய துறைகளில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக அரசின் உயா்கல்வித் துறைச் செயலரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான வி.அருண் ராய், ‘பாடத்திட்ட ஒருங்கிணைப்பு, அனுபவ வழி கற்றல், விளைவு சாா்ந்த திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வலுவான தொழில் துறை ஈடுபாடு உயா்கல்வியில் முக்கியம் என்று பேசினாா்

பல்கலைக்கழகப் பதிவாளா் வி.குமரேசன், ‘மெகாட்ரானிக்ஸ், மோஷன் கண்ட்ரோல் மற்றும் உணா்திறன் தொழில்நுட்பம், ஸ்மாா்ட் மேனுஃபேக்ச்சரிங், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஆக்மென்டட் ரியாலிட்டி, விா்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் ‘பெஸ்ட்’ மையம் மாணவா்களுக்கு நேரடிப் பயிற்சியை வழங்கும். பஜாஜ் நிறுவனத்தின் நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளா்கள் மூத்த தலைவா்களுடன் இணைந்து பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், உறுப்பு கல்லூரிகள், இணைவு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கும் பயன்படும்’ என்றாா் அவா்.