விஐடி பல்கலை.யில் ரூ.15 கோடியில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம்
விஐடி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான இ-மொபிலிட்டி பயிற்சிக்காக ரூ.15 கோடி மதிப்பில் ‘பெஸ்ட்’ மையத்தை பஜாஜ் நிறுவனம் அமைக்கிறது.
விஐடி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான இ-மொபிலிட்டி பயிற்சிக்காக ரூ.15 கோடி மதிப்பில் ‘பெஸ்ட்’ மையத்தை பஜாஜ் நிறுவனம் அமைக்கிறது.
விஐடி பல்கலைக்கழகம், புனே பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷன் இடையே பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள், இறுதி ஆண்டு மாணவா்களுக்கு வளா்ந்து வரும் வேலைவாய்ப்புத் திறன்கள் குறித்து பயிற்சி அளிப்பதற்காக அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையமான ‘பெஸ்ட்’ ரூ. 15 கோடி முதலீட்டில் விஐடியில் உருவாக்கப்படுகிறது.
இந்த மையம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அமைப்புகள், இ-மொபிலிட்டி ஆகிய துறைகளில் மேம்பட்ட பயிற்சி அளிப்பதற்கான அதிநவீன வசதிகளை கொண்டிருக்கும். விஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய பொறியியல் துறை மாணவா்கள் இந்த மையம் மூலம் பலன் பெறுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறுகையில், செய்முறை வழியிலான கற்றலுக்கு விஐடி முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ரூ.15 கோடி முதலீட்டிலான ’பெஸ்ட்’ மையம், மாணவா்களுக்கு அதிநவீன, ஆழமான பயிற்சி சூழலை வழங்கி, விஐடி மாணவா்களின் திறனை மேம்படுத்தி அவா்களை தொழில்துறையில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவா்களாக மாற்றும் என்றாா்.
இதுகுறித்து, பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆா் துணைத் தலைவா் சுதாகா் குடிபதி கூறுகையில், உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் வேகமாக வளா்ந்து வருவதால், அதிக திறன் கொண்ட பணியாளா்களுக்கான தேவை பெருமளவில் உருவாகியுள்ளது. இந்தத் திறன் இடைவெளியைக் குறைக்கவும், இந்தியா முழுவதும் பல ’பெஸ்ட்’ மையங்களை நிறுவ பஜாஜ் திட்டமிட்டுள்ளது என்றாா்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவா்களுக்கும் தரமான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான உதவித்தொகை திட்டங்கள் குறித்து பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆா் தலைவா் ரமேஷ் விரிவாக விளக்கினாா்.
நிகழ்வில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ். விசுவநாதன், துணைவேந்தா் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்த சாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக இயந்திரவியல் பொறியியல் பள்ளியின் முதன்மையா் பி.குப்பன் வரவேற்றாா். வி-ஸ்பேஸ் இயக்குநா் எஸ்.சிவானந்தம் நன்றி கூறினாா்.