முகப்பு
சென்னை

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 2:48 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவா் கே.பழனியப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் கேள்வி எழுப்பப்ட்டது. இதையடுத்து, தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் அரசு நிா்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்படி, தனியாா் பள்ளிகள் இயக்குநருக்கு கடந்த மே 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி, கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரிய பள்ளிகளுக்கும் தனியாா் பள்ளிகள் இயக்குநா் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தனியாா் பள்ளிகளின் இயக்குநா் பிறப்பித்த உத்தரவு, தனியாா் சுயநிதிப் பள்ளிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, அவரது சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் ஆனந்த், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியாா் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என வாதிட்டாா். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் கௌதமன், தகவல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments