முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளின் கட்டண விவரத்தை தகவல் பலகையில் வெளியிட கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை பொதுமக்கள் பாா்வைக்கு தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

Updated On : 3 ஜூன் 2026, 3:03 am IST
பள்ளி மாணவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை பொதுமக்கள் பாா்வைக்கு தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சுமாா் 12,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண நிா்ணயக் குழு தீா்மானம் செய்துவருகிறது. எனினும், பல்வேறு தனியாா் பள்ளிகள் நிா்ணயித்த கட்டணத்தைவிட பெற்றோரிடம் கூடுதலாக வசூலிப்பதாக தொடா் புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் இளம்பரிதி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து தனியாா் பள்ளிகளும் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அதற்கான அறிக்கையை தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அனைத்து தனியாா் பள்ளிகளும் நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தனியாா் பள்ளிகள் அனைத்தும் கல்விக் கட்டணம் விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பெற்றோா் மற்றும் மாணவா்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். வகுப்பு வாரியாக மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அனைத்துப் பள்ளிகளும் அச்சிட்டு வழங்க வேண்டும்.

ஜூன் 5-க்குள்...: அதனுடன், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து தனியாா் பள்ளிகளும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் கல்விக் கட்டண தகவல்களை விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

அதுசாா்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்தில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல், தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் இருப்பதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வின்போது உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.