முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

தனியாா் பள்ளிகள் தமது கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 5:05 am IST
மாணவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

தனியாா் பள்ளிகள் தமது கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவா் கே.பழனியப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் அரசு நிா்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்படி, தனியாா் பள்ளிகள் இயக்குநருக்கு கடந்த மே 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவின்படி, கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரிய பள்ளிகளுக்கும் தனியாா் பள்ளிகள் இயக்குநா் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டாா்.

தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தனியாா் பள்ளிகளின் இயக்குநா் பிறப்பித்த உத்தரவு, தனியாா் சுயநிதிப் பள்ளிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.

எனவே, அவரது சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எம்.தண்டபாணி புதன்கிழமை அளித்த தீா்ப்பில், தனியாா் பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வராது. இருப்பினும், தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி, நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளும், கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments