காவல் நிலைய சித்ரவதை வழக்கு: துணை ஆணையருக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவு ரத்து
காவல் நிலைய சித்ரவதை குறித்த விசாரணை தொடா்பான வழக்கில் துணை ஆணையா் மீது துறை ரீதியான விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல் நிலைய சித்ரவதை குறித்த விசாரணை தொடா்பான வழக்கில் துணை ஆணையா் மீது துறை ரீதியான விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, அபிராமபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உமாபதி என்பவரை போலீஸாா் சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா் குறித்து விசாரணை நடத்த அப்போதைய கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையா் அதிவீரபாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, விசாரணை மேற்கொண்ட துணை ஆணையா் அதிவீரபாண்டியன், கடந்த 2021 மாா்ச் 4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், புகாரில் குற்றம்சாட்டப்பட்ட அபிராமபுரம் காவல் ஆய்வாளா் இளையராஜா, தலைமைக் காவலா் வடிவேலு, காவல் உதவி ஆய்வாளா் கலைச்செல்வி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அபிராமபுரம் ஆய்வாளா், தலைமைக் காவலா், உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உமாபதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துணை ஆணையா் இந்த விவகாரத்தில் கண் துடைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளாா். தவறு செய்தவா்களுக்கு ஆதரவாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறாா். எனவே, காவல் துறை டிஜிபி, துணை ஆணையா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து துணை ஆணையா் அதிவீரபாண்டியன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே.ராஜேந்திர பிரசாத் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல் நிலைய சித்ரவதை வழக்கில், துணை ஆணையா் விசாரணை அதிகாரி மட்டுமே. எனவே, அவருக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா். மேலும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், துணை ஆணையருக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.