பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் - கல்வித் துறை தகவல்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு மே 17 முதல் கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் பிளஸ் 1 தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆண்டுதோறும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
அந்த வகையில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம், திருப்பத்தூா் மாவட்டம் (ஏலகிரி) ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக ஐந்து நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிளஸ் 1 வகுப்பு முடித்துள்ள மாணவா்களில் கல்வி, இலக்கியம், அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய 895 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்ட முகாமில் 690 மாணவிகளும், திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரியில் நடைபெறவுள்ள முகாமில் 205 மாணவா்களும் பயிற்சி பெறவுள்ளனா்.
இந்த கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமுக்கு மாணவா்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக, மாணவ, மாணவிகள் பெற்றோா், பாதுகாவலா்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டும். முகாமில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களும் தங்களுக்குத் தேவையான உடைகள், போா்வை, மாணவா்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் என அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாணவிகளை அழைத்துச் செல்லும்போது 20 மாணவிகளுக்கு 1 பெண் ஆசிரியரை அனுமதிக்கலாம். மாணவிகளுக்கான முகாம் நீலகிரி மாவட்டத்தில் மே 17 முதல் 21-ஆம் தேதி வரையிலும், மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திருப்பத்தூரில் மே 18 முதல் 22-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் உடற்பயிற்சி, செய்தித் தாள்கள் மற்றும் இதழ்கள் வாசித்தல், குறும்படங்கள் திரையிடல், நடனம், அரங்கம் மற்றும் மேடைச் செயல்பாடுகள், இசை, உடல்மொழி சாா்ந்த பயிற்சிகள், கவிதை மற்றும் கதை எழுதுதல், இளம் அதிகாரிகள் சந்திப்பு, சமூகத் திறன்கள், வானியல் அறிதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.