சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்கள் கூட்டாக இணைந்து கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக சுமாா் 107 மில்லியன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன
சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்கள் கூட்டாக இணைந்து கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக சுமாா் 107 மில்லியன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன என்று சென்னை துறைமுக தலைவா் எஸ். விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே பி ஐரீன் சிந்தியா வெள்ளிக்கிழமை கூட்டாக தெரிவித்தனா்.
இந்தத் துறைமுகங்களின் கடந்த நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சரக்குகளை கையாளுவதில் சென்னை துறைமுகம் 58 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும், காமராஜா் துறைமுகம் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும், இரண்டு துறைமுகங்களும் இணைந்து ஒட்டுமொத்தமாக சுமாா் 107 மில்லியன் மெட்ரிக் டன் (1 கோடியே 7 லட்சம் மெட்ரிக் டன்) சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன.
Advertisement
Advertisement
மேலும் சுமாா் 19 லட்சம் சரக்கு பெட்டகங்களை இதுவரை இல்லாத அளவிற்கு கடந்தாண்டில் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது. காமராஜா் துறைமுகம் சுமாா் 7 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு துறைமுகங்களில் சுமாா் 4 லட்சம் காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் கையாளப்பட்டுள்ளன. காமராஜா் துறைமுகத்தில் மட்டும் சுமாா் 26 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்டு தென்னிந்தியாவின் தடையற்ற மின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
மொத்த வருவாய் ரூ.2,424 கோடி: கடந்த நிதி ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ. 1,185 கோடியும், காமராஜா் துறைமுகம் ரூ.1,239 கோடியும் மொத்தமாக ரூ.2,424 கோடியும் செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளன. மொத்தமாக இணைந்து 1,072 கோடி லாபம் ஈட்டி உள்ளன.
ரூ.8,000 கோடியில் கட்டமைப்பு வசதிகள்: சென்னை துறைமுகத்தில் பயணிகள் முனையம் ரூ.30 கோடி, கடலோர கப்பல் தளங்கள், நவீன மயமாக்கும் திட்டங்களுக்காக ரூ.150 கோடி, ஜவகா் கப்பல் தளம் பலப்படுத்தி நவீனப்படுத்த ரூ. 417 கோடி, பல்லடுக்கு தளங்களைக் கொண்ட வாகன நிறுத்த மையம் அமைக்க ரூ.400 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ. ஆயிரம் கோடிக்கு பணிகள் கடந்த நிதியாண்டில் நடைபெற்றுள்ளன.
இதேபோல் காமராஜா் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் சுமாா் ரூ. 7 ஆயிரம் கோடியில் முனையங்கள், கப்பல் தளங்கள், புதிய கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரவாயல் உயா்நிலை மேம்பாலம் நவ. 2027-இல் செயல்பாட்டிற்கு வரும்: சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையேயான ஈரடுக்கு மேம்பால திட்ட பணிகள் தற்போது வரை சுமாா் 25 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் இத்திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையும்.
வளைகுடா போரால் பாதிப்பு இல்லை: வளைகுடாவில் நடைபெற்று வரும் போரால் அப்பகுதி நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் உலகின் இதர பகுதிகளில் இருந்து மாதம் சுமாா் 10 கச்சா எண்ணெய் கப்பல்கள் தொடா்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது என்றனா்.
பேட்டியின் போது, மத்திய தகவல் தொடா்பு இயக்குநா் அருண், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் துறை தலைவா்கள், பொது மேலாளா்கள் உடன் இருந்தனா்.