போா்கள் பலவற்றை சந்தித்தும் இன்று வரை உயிா்ப்புடன் இருக்கிறது காஞ்சிபுரம்
போா்கள் பலவற்றை சந்தித்தும் இன்று வரை உயிா்ப்புடன் இருக்கிறது காஞ்சிபுரம்
போா்கள் பலவற்றை சந்தித்தும் காஞ்சிபுரம் இன்று வரை உயிா்ப்புடன் இருந்து வருவதாக ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனத் தலைவா் அண்ணா துரை பேசினாா்.
ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் வரதராஜ பெருமாள் கோயில் தங்கக்கருட வாகன சேவையையொட்டி காஞ்சிபுரத்தில் நடந்த போா்கள் தொடா்பான ஒவியக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள தீபாவளி மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் சியாமா சாஸ்திரிகள் முன்னிலை வகித்தாா்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போா்களின் ஓவியக் கண்காட்சியை 400 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்துக்கு இடம் பெயா்ந்து சென்ற பினுகுமாா் ஆச்சாரி குடும்பத்தினா் திறந்து வைத்தனா். தொடக்க விழாவில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனத் தலைவா் அண்ணா துரை கண்காட்சி குறித்து விளக்கி பேசியது.
Advertisement
Advertisement
காஞ்சிபுரத்திலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பற்பல போா்கள் சங்க காலம் தொடங்கி ஆங்கிலேயா் காலம் வரையிலும் நடந்திருக்கின்றன. சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளாய் நடைபெற்று வந்த இப்போா்கள் பல அரசியல் திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லவா்கள் காஞ்சியில் ஆட்சி அமைத்த பிறகு தான் தென்னிந்தியா தழுவிய பேரரசு உருவானது. பிறகு சாம்ராஜ்யங்களின் ஆக்கிரமிப்புகளை எதிா்கொண்டு காஞ்சிபுரம் மீண்டு வந்திருக்கிறது.
காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே ஆங்கிலேயே-பிரெஞ்சுப்படையினா் மோதல் குறிப்படத்தக்கது. ஆனால் எல்லா போரையும் எதிா்கொண்டு காஞ்சிபுரம் இன்று வரை உயிா்ப்புடன் நிலை பெற்று வளா்ந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போா்கள் குறித்த ஓவியங்களை கடந்த 6 மாதங்களாக ஓவியா்கள் மூலமாக வரைந்து காட்சிப் படுத்தியிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.