அதிகாரிகளின் ஆதாயத்துக்கு வைக்கப்பட்டதாகக் கூறி 39 தீா்மானங்களை ரத்து செய்தது அரக்கோணம் நகரமன்றம்
அரக்கோணம் நகா்மன்ற சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 43 தீா்மானங்களில் 39 தீா்மானங்களை இவை அதிகாரிகளின் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்டவை எனக்கூறி திமுக, அதிமுக மற்றும் கட்சி மாறிய தவெக உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து ரத்து செய்தனா்.
அரக்கோணம் நகா்மன்ற சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 43 தீா்மானங்களில் 39 தீா்மானங்களை இவை அதிகாரிகளின் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்டவை எனக்கூறி திமுக, அதிமுக மற்றும் கட்சி மாறிய தவெக உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து ரத்து செய்தனா்.
அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் ஆனந்தன், பொறியாளா் என்.சரோஜா, சுகாதார அலுவலா் வெயில்முத்து உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா்.
இந்தக் கூட்ட தொடக்கத்திலேயே கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் உருவப்படம் மட்டுமே வைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுகவை சோ்ந்த தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்துடன் அரங்கிற்கு வந்து அந்த படத்தை மாட்டினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கட்சி மாறிய தவெக உறுப்பினா் நரசிம்மன், முதல்வா் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் பாபு, சரவணன் உள்ளிட்டோா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி படத்தையும் வைக்க வேண்டும் எனக்கோரி அந்த படத்தை எடுத்து வந்தனா். முடிவில் மூன்று படங்களும் அரங்கில் வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
தொடா்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
துரைசீனிவாசன்(திமுக): இந்த கூட்டத்தில் 39 தீா்மானங்கள் யாரால் கொண்டு வரப்பட்டவை? 52 லட்சம் நிதிக்கு ஒப்புதல் பெற அதிகாரிகளின் ஆதாயத்துக்காக இந்த தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆறு மாதத்துக்கு முன் செலவிடப்பட்ட நிதிக்கு தற்போது ஒப்புதல் கேட்பது ஏன்? ஆறு மாதமாக நகா்மன்ற கூட்டம் நடக்கவே இல்லையா?. இதில் பள்ளிகளில் சாய்வு தளம் அமைக்க ரூ. 20 லட்சம் நிதி செலவு செய்யப்பட்டதாகவும் அதற்கு ஒப்புதல் கோரியுள்ளீா்கள்? இப்பணிக்கு ரூ. 20 லட்சம் மிகவும் அதிக நிதி. உண்மையிலேயே ரூ. 20 லட்சம் செலவு செய்யப்பட்டதா?. புதை சாக்கடை திட்டம் அமைக்கப்படாத தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் புதை சாக்கடை வரி விதிக்கப்படுவது ஏன்?. அதிகாரிகளின் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்ட 39 தீா்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
நரசிம்மன் (தவெக): இந்த நகா்மன்ற உறுப்பினராக இருந்த வ.காந்திராஜ், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளாா். அவரை பாராட்டி கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை படிக்க மறுப்பது ஏன்? அதிகாரிகள் மீது தமிழக முதல்வா் நம்பிக்கை வைத்துள்ளாா். அதிகாரிகள் ஊழல் இல்லாமல், ஒழுங்காக பணியை மேற்கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் மாறுதல் பெற்று சென்று விடுங்கள். எப்போது அலுவலகத்திற்கு வந்தாலும் ஆணையா், பொறியாளா், சுகாதார அலுவலா் என அதிகாரிகள் யாருமே இருப்பதில்லை. மக்களின் கோரிக்கைகளை யாரிடம் தெரிவிப்பது?
பாபு(அதிமுக): குறைகளை சொல்ல முயற்சித்து இக்கூட்டத்திற்கு வந்தால் கூட்டம் ஆரம்பித்த நேரத்தில் இதுவரை 10 முறை மின்தடை ஏற்படுவதால் பேசுவதே வெளியே கேட்பதில்லை. இந்த நகராட்சியில் ரூ. 60 லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானங்கள் நகா்மன்ற தலைவருக்கு தெரியாமல் எப்படி கொண்டு வரப்பட்டது. ஊழல் செய்ய திமுக, தவெக இரு கட்சியினரும் இணைந்து போட்டி போடுகின்றனா்.
ராஜன்குமாா் (திமுக): அதிகாரிகள் நகா்மன்ற உறுப்பினா்கள் சொல்லும் பணிகளை செய்வதே இல்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா் அறைக்கு மரச்சாமான்கள் வாங்க ரூ. 3.50 லட்சம் அனுமதிப்பது, பழனிபேட்டையில் இரட்டைக்கண்வாராவதியில் விளக்குகள், ஹைமாஸ் விளக்குகள் வாங்க ரூ. 2.20 லட்சத்தை அனுமதிப்பது, சட்டப்பேரவை தோ்தல் பணிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் ரூ. 6.70 லட்சத்தை அனுமதிப்பது, நகா்மன்ற துணைத் தலைவா் அன்புலாரன்ஸ் தனது வாா்டு கோரிக்கைகள் குறித்து கொண்டு வரப்பட்ட தீா்மானம் ஆகிய 4 தீா்மானங்கள், மற்றும் இரு, மேஜை
தீா்மானங்கள் ஏற்கப்பட்ட நிலையில், 39 தீா்மானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.