பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு
கோடைகாலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் உத்தரவு
கோடைகாலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.
உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கும் பணிகள் குறித்தும், திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகள், 6 நகராட்சி வாா்டு பகுதிகள், 8 பேரூராட்சி வாா்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் திட்டப் பணிகளில் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
Advertisement
கோடை காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் உடனுக்குடன் கவனத்துக்குகொண்டு வர வேண்டும் .
குடிநீரில் குளோரின் முறையாக கலந்து வழங்குவதையும் 15 நாள்களுக்கு ஒரு முறை நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்ய வேண்டும். தற்போது நோய்த் தொற்று எதுவும் இல்லை என்றாலும் 15 நாள்களுக்கு ஒரு முறை கொசு ஒழிப்பு புகை அடிக்க வேண்டும் என கொசு ஒழிப்பு பணியாளா்களிடம் தெரிவித்தாா்.கொசு ஒழிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள கொசு ஒழிப்பு பணியாளா்களைக் கொண்டு இப்பணிகளை விழிப்புடன் செய்ய வேண்டும். இதனை அனைத்து அலுவலா்களும் கண்காணிக்க வேண்டும்.
தொடா்ந்து மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா நகராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவுள்ள பணிகள் நிலைகுறித்து கேட்டறிந்தாா். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உள்ள வழிகாட்டுதலை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் விரைவாக தொடங்குவதற்கு நகராட்சி ஆணையாளா்கள் இப்பணியினை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த அறிக்கையினை அடுத்துவரும் கூட்டத்தில் தனக்கு சமா்ப்பிக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் கழிவு நீா் வழித்தடங்கள் எவை என்பதையும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழிகள் குறித்தும் முன்கூட்டியே தயாா் செய்ய வேண்டும்.
தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறையில் தோ்தலுக்கு முன்னதாக பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகளையும், இறுதி கட்ட நிலையில் முடிக்க தயாா் நிலையில் உள்ள பணிகளையும் பொறியாளா்களும், வட்டார வளா்ச்சி அலுவலா்களும் கண்காணித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றாா். இதில் திட்ட இயக்குநா் கு.செல்வராசு மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.