முகப்பு
திருவண்ணாமலை

சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,83,516 சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம்

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:43 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,83,516 சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 37 கோடி வழங்கும் பிரதமர் கிசான் சம்மான் நிதி வழங்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். 
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆரணி மக்களவை உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், வேளாண் இணை இயக்குநர் ர.செல்வசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 516 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 37 கோடி வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
விழாவில், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த 11 ஆயிரத்து 866 விவசாயிகள், திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த 21 ஆயிரத்து 793 விவசாயிகள், செங்கம் வட்டத்தைச் சேர்ந்த 26 ஆயிரத்து 480 பேர், தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த 16 ஆயிரத்து 315 பேர், கீழ்பென்னாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 631 பேர், கலசப்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்து 964 பேர், போளூர் வட்டத்தைச் சேர்ந்த 17 ஆயிரத்து 085 பேர், ஜமுனாமரத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 4 ஆயிரத்து 603 பேர், சேத்துப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த 13 ஆயிரத்து 274 பேர், வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 511 பேர், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 913 பேர், வெம்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்து   81 விவசாயிகள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கத்தில்... 
செங்கத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதியுதவி பெறும் திட்டத்தில் 50 விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நிதியைப் பெறுவதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. 
செங்கம் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் பிரதீபா வரவேற்றார். வட்டாட்சியர் பார்த்தசாரதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பரமணியன், செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி இயக்குநர் விவேகானந்தன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசினார். 
தொடர்ந்து, துணை வேளாண் அலுவலர் ஜெயசீலன் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.
நிகழ்வில் 50 விவசாயிகளுக்கு முதல் தவணை தொகையைப் பெறுவதற்கான உத்தரவு நகலை அட்மா திட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
செய்யாறில்...
செய்யாறு அருகே அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் வே.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். அலுவலர் ஆர்.பானுஸ்ரீ, வட்டார தொழில்நுட்ப மேலாளர் டி.என்.ஆனந்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்புரையாற்றிய சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வே.குணசீலன், முதல் தவணைக்கான உத்தரவு நகல்களை விவசாயிகள் 50 பேருக்கு வழங்கினார். பின்னர், இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கும் காட்சிகளை ஒளிபரப்பப்பட்டன.
செய்யாறு வட்டாட்சியர் ஆர்.மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ப.செந்தில்குமாரி, உதவி பொறியாளர் எஸ்.இதயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.