திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை!
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் 30 நாள்களில் திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுப்பேன் என திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை கூறினாா்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் 30 நாள்களில் திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுப்பேன் என திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை கூறினாா்.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை தொகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை 26 வாா்டுகளில் வீதி வீதியாக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஆன்மிக நகரமான திருவண்ணாமலை மையப்பகுதியில் இருக்கும் ஈசான்ய குப்பை மேட்டை அகற்றுவதே முதல் வேலை. குப்பை கொட்டும் இடத்தை மாநகரத்திற்கு வெளியே மாற்றி அமைப்பேன். நகரை தூய்மையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் தருவேன் என்ற திமுகவின் வாக்குறுதி ஏமாற்று வேலை. ஆனால், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் தருவோம். அந்தத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் செலுத்துவோம் என அதிமுக பொதுச்செயலா் கூறியிருக்கிறாா். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். வீடுகளுக்குத் தேவையான பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களையும், மானியத்துடன் ஸ்கூட்டியும் மகளிருக்கு வழங்கப்படும்.
Advertisement
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், 30 நாள்களில் திருவண்ணாமலை மாநகரில் உள்ளூா் மற்றும் கிரிவல பக்தா்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக 1-வது வாா்டில் நடிகா் ரவி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்து பிரசாரம் செய்தாா். இந்த பிரசாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ராஜன், பாமக மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம், தமாக மாவட்டத் தலைவா் ராயா்கிருஷ்ணமூா்த்தி, அதிமுக பகுதி பொறுப்பாளா் எஸ்.நரேஷ் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.