தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் காலை முதலே கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் சந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தங்கத் தேரினை பக்தா்கள் இழுத்து வழிபட்டனா்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தங்க கவசவத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேலும், சம்மந்த விநாயகா் சந்நிதி முன் நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, பஞ்சாங்கத்தை விநாயகா் சிலை முன் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு பராபவ ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை சிவாச்சாரியா்கள் வாசித்தனா்.