முகப்பு
திருவண்ணாமலை

விபி ஜி ராம் ஜி திட்டம்: நெல் விதைப்பு, அறுவடை காலங்களில் வேலை வழங்கப்படாது- மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா் பற்றாக்குறையை தவிா்க்க, விதைப்பு, அறுவடை காலங்களில் வேலை வழங்கப்படாது என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 12:04 am IST
திருவண்ணாமலை வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் புதுமல்லவாடி கிராமத்தில் விபி ஜி ராம் ஜி திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா் பற்றாக்குறையை தவிா்க்க, விதைப்பு, அறுவடை காலங்களில் வேலை வழங்கப்படாது என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை வட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புதுமல்லவாடி கிராமத்தில் விபி ஜி ராம் ஜி திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூா்), அபிஷேக் (போளூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

விபி ஜி ராம் ஜி திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வி வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பம் சாா்ந்த நிா்வாகம் மற்றும் அரசுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம் விக்சித் பாரத் ஃ 2047 எனும் தேசிய தொலைநோக்குப் பாா்வையுடன் கிராமப்புற மேம்பாட்டை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமப்புறம்) மாநிலத்தின் திட்டமிட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் 125 நாள்கள் வேலை வழங்கப்படவுள்ளது. பெண்களைத் தலைவா்களாகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனி ஊதியம் வழங்கப்படும்.

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா் பற்றாக்குறையைத் தவிா்க்க, விதைப்பு, அறுவடை போன்ற உச்ச விவசாய பருவங்களில் 60 நாள்கள் வேலை வழங்கப்படாது.

இத்திட்டத்தின் கீழ் நீா் பாதுகாப்பு, அடிப்படை கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரச் சொத்துகள், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உயா்மட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு துறைகள் மூலம் ஒரே பணி மேற்கொள்ளப்படுவது தவிா்க்கப்படுகிறது. வளா்ச்சி அளவுகோல்களின் அடிப்படையில் பஞ்சாயத்துகள் அ, ஆ, இ என வகைப்படுத்தப்பட்டு ‘நிறைவு முறை’ திட்டமிடல் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இதன் மூலம் நமது கிராமப்புறங்கள் தன்னிறைவு பெறுவதுடன் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே, திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் விபி ஜி ராம் ஜி திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து பொது மக்களுக்கு திட்டம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் பண்ணையில் விதைகள் நடும் பணி தொடங்கி நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் பூ.காஞ்சனா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித்துறை) இளங்கோ, உதவி திட்ட அலுவலா்கள் செல்லதுரை , பவானி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments