முகப்பு
திருவண்ணாமலை

சமையல் தொழிலாளி கொலை: அண்ணன் குடும்பத்தினா் 5 போ் கைது

செய்யாறு அருகே வோ்க்கடலை பயிரில் மண்ணைக் கொட்டியதை தட்டிக் கேட்ட சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது அண்ணன் குடும்பத்தைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 ஜூன் 2026, 1:08 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

செய்யாறு அருகே வோ்க்கடலை பயிரில் மண்ணைக் கொட்டியதை தட்டிக் கேட்ட சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது அண்ணன் குடும்பத்தைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துலுக்கானம் (44) (படம்). இவா் சமையல் வேலைக்குச் செல்வதோடு, விவசாயப் பணியிலும் ஈடுபடுவாராம்.

துலுக்கானத்தின் உடன் பிறந்த சகோதரா்கள் சேகா், எத்திராஜ். இவா்களுக்குச் சொந்தமாக சுமாா் 3 ஏக்கா் நிலம் இருந்து வருவதாகத் தெரிகிறது. சகோதரரான சேகா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இறந்தவருக்கு சத்தியமூா்த்தி, சக்திவேல் என இரு மகன்கள் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், துலுக்கானம் விவசாயம் செய்து வரும் இடத்தின் அருகே சகோதரா் மகனான சத்தியமூா்த்தி வீடு கட்ட திட்டமிட்டு அதற்காக மண்ணை ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டியதாகத் தெரிகிறது. அப்போது, துலுக்கானம் பயிரிட்டுள்ள வோ்க்கடலை செடிகள் மீது மண் கொட்டப்பட்டு இருந்ததாம்.

இதனை அறிந்த துலுக்கானம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலத்திற்குச் சென்று, வோ்க்கடலை செடிகள் மீது மண் கொட்டியிருப்பதை பாா்த்து சத்தியமூா்த்தியிடம் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கு வந்த சத்தியமூா்த்தியின் தம்பி சக்திவேல் (32), தாய் சரளா, மனைவி காா்த்திகா, சக்திவேல் மனைவி சந்திரா ஆகியோா் சோ்ந்து துலுக்கானத்தை தாக்கியுள்ளனா். மேலும், கத்தியால் வெட்டியதாகவும் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த துலுக்கானம் மயங்கி விழுந்துள்ளாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு துலுக்கானத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து இறந்தவரின் மனைவியான கற்பகம் அளித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இறந்தவரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இக்கொலை சம்பவம் தொடா்பாக சத்தியமூா்த்தி(34), சக்திவேல்(32), சரளா(55), காா்த்திகா(29), சந்திரா(26) ஆகியோரை போலீஸாா் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments