ஏப்.24-இல் கண்டி மஹால் திறப்பு: தூய்மைப்படுத்தப்படும் வேலூர் கோட்டை அகழி
இலங்கையை ஆண்ட விக்கிரமராஜசிங்கன் அவரது குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹால், ஏப்ரல் 24-ஆம் தேதி
இலங்கையை ஆண்ட விக்கிரமராஜசிங்கன் அவரது குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹால், ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூர் கோட்டை அகழி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு கண்டி மஹால், திப்பு மஹால், ஹைதர் மஹால் என பல்வேறு தொன்மையான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள பழைமையான கட்டடங்கள் அமைந்துள்ளன.
பல்வேறு அரசு அலுவலகங்கள் இந்தக் கட்டடங்களில் இருந்த நிலையில், அவை படிப்படியாக சொந்தக் கட்டடங்களுக்கு இடம்பெயர்ந்தன.
தற்போது வேலூர் கோட்டைக்குள் காவலர் பயிற்சிப்பள்ளி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், மாநில அரசு அருங்காட்சியகம், பொதுப் பணித் துறை அலுவலகம் ஆகியவை மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூர் கோட்டைக்குள் உள்ள வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட கட்டடங்களை சீரமைப்பதுடன், கோட்டை வளாகத்தை முழுமையாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்த தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதன்படி, தொல்லியல் துறை சார்பில் கோட்டைவெளி மைதானம் முழுவதையும் பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பெங்களூரு சாலை மக்கான் சிக்னலையொட்டியுள்ள பூங்காவையும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கன் அவரது குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹாலை மறுசீரமைப்பு செய்து, விக்ரமராஜசிங்கனின் வரலாற்றுத் தகவலுடன், ஓவியங்களையும் வைத்து பார்வையாளர்களுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் திறந்துவிட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் வளர்ந்துள்ள புதர்களை மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் அகற்றும் பணி தொல்லியல் துறை சார்பில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணியில் மாநகராட்சியின் சார்பில் 30 பணியாளர்களும், தொல்லியல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தன்னார்வலர்களும் பங்கேற்க தொல்லியல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.