குடும்பத்தின் தனியுரிமை, மனநிலையை மதியுங்கள்..! அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்!
நடிகர் அஜித் குமார் குடும்பத்தினர் வெளியிட்ட பதிவு குறித்து...
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி இறந்ததுக்கு அவர்களது குடும்பத்தினர் சார்பாக, ”இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில், எங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மனநிலையையும் மதித்து புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்கள்.
தமிழின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி (84) சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்த இறப்பு குறித்து அஜித் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன.
இந்தக் கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகன் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் எங்களுடன் நிற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.
இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில், எங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மனநிலையையும் மதித்து புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்க இயலாத நிலை இருக்கலாம்.
இறுதிச் சடங்குகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெறும். எங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடைய தங்களது பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது அன்பும் அரவணைப்பும் எங்களுடன் என்றும் நிலைத்திருக்கும் அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார்.
இரங்கல் செய்திகளை அனுப்ப, தயவுசெய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்: psmanifamily@gmail.com எனக் கூறியுள்ளார்கள்.
Respect the family's privacy and sentiments! — Ajith Kumar's Family
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.