வேலூர் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுடன் விக்கிரமராஜா ஆலோசனை
பொலிவுறு நகர் திட்டத்தால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 752 வியாபாரிகள் கடைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
பொலிவுறு நகர் திட்டத்தால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 752 வியாபாரிகள் கடைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அந்த காய்கறி மார்க்கெட்டில் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் வேலூர் நேதாஜி மார்க்கெட்டை இடித்துவிட்டு, இரு அடுக்குகளில் கடைகள் கட்டப்பட உள்ளன. புதிதாக கடைகள் கட்டப்பட்ட பிறகு, பொது ஏலத்தின் மூலமாக கடைகள் வாடகைக்கு விடப்பட உள்ளது.
இதனால் ஏற்கெனவே அங்கு வியாபாரம் செய்து வரும் 752 வியாபாரிகளுக்கு கடைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிதாக கட்டப்படும் நேதாஜி மார்க்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, அந்த காய்கறி மார்க்கெட்டில் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 752 கடைகளால் அந்த 752 குடும்பங்கள் மட்டுமே பலன் அடையவில்லை. மறைமுகமாக 10 ஆயிரம் உழைப்பாளர்களும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடைகளை இடித்துவிட்டு நவீன முறையில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அனைத்து வியாபாரிகளும், உழைப்பாளர்களும் பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, புதிய கடைகள் கட்டப்பட்ட பிறகு 752 வியாபாரிகளுக்கும், கடைகளை முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
அதன்பிறகே மற்றவர்களுக்கு பொது ஏலம் மூலம் கடைகளை ஒதுக்க வேண்டும்.
வரும் 23-ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய வணிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாக சேர்க்கப்படும்.
இதேபோல், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி பேரணி நடத்தப்படும் என்றார்.
பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.