விபத்து மற்றும் குற்றச் செய்திகள்
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
விபத்தில் இளைஞர் சாவு
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
ஆற்காட்டை அடுத்த கேவேளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (28). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (25). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் புதன்கிழமை வாழைப்பந்தல் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கேவேளூர் நோக்கி புறப்பட்டனர். அப்போது கலவை அருகே உள்ள அல்லாச்சேரி பகுதியில் இவர்கள் வந்த வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தனர்.
இதில் பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜசேகர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கலவை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை சாவு
ஆற்காடு, ஜன.23: பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளியின் 2 வயது ஆண் குழந்தை இறந்தது.
ஆற்காடு வட்டம், கலவை அருகே உள்ள பென்னகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி முருகானந்தம். அவருக்கு சுதர்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. அக்குழந்தை புதன்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் இருந்து மாணவர்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பேருந்து அருகில் குழந்தை வந்து நின்றது.இதைக் கவனிக்காத ஓட்டுநர், பேருந்தை இயக்கியபோது குழந்தை பின்சக்கரத்தில் சிக்கி இறந்தது.
வாழைப்பந்தல் போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் சந்திரனை (50) கைது செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
குடியாத்தம், ஜன. 23: குடியாத்தம் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
பேர்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாபு (23). இவர், புதன்கிழமை குடியாத்தத்தை அடுத்த தனம் நகரில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டபோது மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தார். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
நின்ற லாரி மீது பைக் மோதல்: 2 மாணவர்கள் சாவு
ஆம்பூர், ஜன. 23: ஆம்பூர் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மாதனூர் அருகே பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ் (20). இவர், ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் சட்டப் படிப்பு பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). நண்பர்களான 2 பேரும் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் இருந்து மாதனூர் நோக்கிச் சென்றனர். மாதனூர், தோட்டாளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது இவர்கள் வாகனம் மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த 2 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனர். ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.