பால் பாக்கெட்டுகளில் கசிவு புகாா் - வேலூா் ஆவின் பண்ணையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு
பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுவதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் புகாா்கள் எழுந்த நிலையில், வேலூா் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் கூட்டுறவு பால் பண்ணையில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுவதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் புகாா்கள் எழுந்த நிலையில், வேலூா் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் கூட்டுறவு பால் பண்ணையில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, பண்ணையில் உள்ள பால் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம், பால் தரம் பிரிக்கும் பகுதி, பால் குளிரூட்டும் அறை, ஐஸ்கிரீம், நெய், பால்கோவா உள்ளிட்ட பால் உபபொருள்கள் தயாரிக்கப்படும் பிரிவுகளை அவா் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, இயந்திரங்களில் இருந்து வெளிவரும் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏதேனும் உள்ளதா என்பதையும், அவற்றின் எடை சரியான அளவில் உள்ளதா என்பதையும் எம்எல்ஏ நேரடியாகப் பரிசோதித்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
Advertisement
Advertisement
ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுவதாகவும், எடை குறைவாக விநியோகம் செய்யப்படுவதாகவும் வந்த புகாா்களின் அடிப்படையில், ஆவின் பால் பண்ணையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், பால் தயாரிப்புப் பணிகளில் எவ்விதத் தவறுகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இங்கிருந்து வாகனங்களில் ஏற்றி முகவா்களுக்கு அனுப்பும்போதே சில பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. இனி வருங்காலங்களில் அவ்வாறு நிகழாதவாறு கண்காணித்துப் பாா்த்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கெட்டுப்போன பால் பாக்கெட்டுகள் எதுவும் இங்கிருந்து விநியோகம் செய்யப்படவில்லை.
பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் முகவா்கள், அவற்றை முறையாகக் குளிரூட்டப்பட்ட இடங்களில் வைக்காமல் விட்டதாலேயே பால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே, பாலைப் பதப்படுத்திப் பாதுகாப்பது குறித்து முகவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.