வாழ்வாதாரத்தை இழந்து தடுமாறும் பாலமலை ஆதிவாசிகள்
பெ.நா.பாளையம், ஜூலை 5: பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பாலமலையில் காட்டு விலங்குகளின் தொல்லையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆதிவாசிகள், பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், பெ
பெ.நா.பாளையம், ஜூலை 5: பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பாலமலையில் காட்டு விலங்குகளின் தொல்லையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆதிவாசிகள், பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பாலமலை, புகழ் பெற்ற வைணவத் தலமாகும். இங்குள்ள ரங்கநாதர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இம்மலையில் பூர்வக் குடியினராக இருளர் எனப்படும் ஆதிவாசிகள் வசிக்கின்றனர்.
இம்மலையில் சில கிமீ. தூரத்துக்குள் மாங்குழி, பெரும்பதி, பெருக்கைபதி, பெருக்கைபதி புதூர், பசுமணி, பசுமணிப்புதூர், குஞ்சூர்பதி உள்ளிட்ட கிராமங்களில் 300 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கேள்விக்குறியான விவசாயம்: கால்நடை வளர்ப்பு, சிறுதானிய சாகுபடி ஆகியவை இவர்களது தொழில்கள். ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயத்தை முற்றிலும் கைவிட்டு விட்டனர். அதனால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
நெடுங்காலமாக இங்கு வசிப்பதால் ஆதிவாசிளின் வாழ்வாதாரத்திற்கென அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தினை, ராகி, சேளம், கேழ்வரகு, அவரை போன்றவற்றை பயிரிட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இங்கு யானைகளின் தொல்லை அதிகமாகிவிட்டது.
இதனால் அச்சமுற்ற ஆதிவாசிகள் விவசாயம் செய்வதில்லை; வனத்துறையினரும் அடிக்கடி கெடுபிடி செய்ததால் போக்கிடம் தெரியாமல் திண்டாடினர்.
இதனால் தற்போது இவர்கள் மலையடிவாரத்தில் உள்ள மற்றவர்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் கூலிவேலை செய்கின்றனர். சொந்த நிலமிருந்தும் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இவர்கள் ஆளாகி விட்டனர்.
இடியும் நிலையில் வீடுகள்: இங்கு அரசு சார்பில் சிலருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. கதவுகளும் உறுதியானதாக இல்லை. இதனால் உணவுப் பொருட்களைத் தேடி வரும் யானைகளால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
இங்குள்ள தென்னை மரங்களை ஒடித்துத் தள்ளும் காட்டு யானைகள் சில சமயங்களில் இரவில் வீட்டு வாசல்களின் முன்பு நின்று கொள்கின்றன. இந்த நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் வீடுகளில் மக்கள் பயத்துடன் முடங்கிக் கிடக்கவேண்டிய அபாய நிலை நிலவுகிறது. தங்களுக்கு உறுதியான புதிய வீடுகளை அரசே கட்டித்தர வேண்டும் என்பது ஆதிவாசிகள் வேண்டுகோளாக உள்ளது.
பலனளிக்காத அடிப்படை வசதிகள்: விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நிதியின் கீழ் பெருக்கைபதி, மாங்குழி உள்ளிட்ட கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. இதில் பெருக்கைபதியில் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெட்டப்பட்ட குளம் காணாமலே போய்விட்டது. இக்கிராமத்தின் அருகில் உயர்மட்ட குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டது. அதுவும் பயன்படுத்தப்படாமல் வீணாகிவிட்டது.
பெரும்பாலான மலைவாசிகள் வேலைக்காக அடிவாரத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இதனைப் பயன்படுத்தி சில தனிநபர்கள் ஜீப் இயக்குகின்றனர். ஒருமுறை பயணிக்க ஒருவரிடமிருந்து ரூ. 20 வரை வசூலிக்கப்பட்டுகிறது.
இதில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். ஜீப்கள் மிகவும் மோசமாக நிலையில் இயக்கப்படுவதால் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
தங்கள் பிரச்னைகள் குறித்து மலைவாசிகள் கூறியது:
பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆதிவாசிகளுக்கு, மீண்டும் விவசாயம் செய்திட அரசு உதவ வேண்டும். காட்டுயானைகளால் தாக்கப்படும் நிலையைத் தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழ், மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி பயில உரிய உதவிகள் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் ஆதிவாசிகளுக்கென நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை முறையாக தவறாமல் அமல்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள வீடுகளை புதிதாகக் கட்டிக்கொள்ள நிதியுதவி அளிக்க வேண்டும். 50க்கு மேற்பட்ட மலைவாழ் இளைஞர்கள் இங்கு உள்ளனர். இவர்களுக்கு போதிய தொழிற்பயிற்சி வழங்கப்பட வேண்டும். மருத்துவ வசதிக்கென கோவனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.
மீண்டும் மறுவாழ்வு கிடைக்குமா? இதுசம்பந்தமாக வனத்துறையினர் கூறியது:
ஆதிவாசிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு நிதியுதவியுடன் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு சுயதொழில் செய்திட கடனுதவியும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
யானைகள் ஊருக்குள் புகுவதைக் தடுக்க வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன அதிகாரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். மோசமான ஜீப்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
ஆபத்தான சூழலில் வாழும் ஆதிவாசிகளுக்கு தரமான வாழ்க்கைச் சூழலை அளிப்பது அரசின் கடமை. இயற்கையை மனிதன் அழிப்பதால் உருவாகும் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தடுக்க சிலரால் மட்டுமே முடியாது. வனத்துறை, காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், பழம்பெருமை மிக்க பாலமலையையும், அதை நம்பியுள்ள ஆதிவாசி மக்களையும் காக்க முடியும்.